Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

சென்னைக்கு கூடுதலாக கிருஷ்ணா தண்ணீர்

வணிகம் | Sat, 13 Mar 2010 11:37 PM IST

சென்னை, மார்ச்.13 (டிஎன்எஸ்) சென்னை குடிநீர் ஏரிகளில் இந்த ஆண்டு கடந்த வருடத்தைவிட தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. எனவே கிருஷ்ணா தண்ணீரை கூடுதலாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு 4.145 டி.எம்.சி. தண்ணீர் வந்திருந்தபோது, ஆந்திர கலவரம் காரணமாக அணை மூடப்பட்டது. பின்னர் தமிழக அரசின் வற்புறுத்தல் காரணமாக பிப்ரவரி 2-ந்தேதி கிருஷ்ணா தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டது.
 
தற்போது மீண்டும் 1.93 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. ஏப்ரல் மாதம் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டலேறு அணையில் 6.3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தாலே சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்க முடியும்.
 
இப்போது அணையில் 23 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. எனவே கூடுதலாக தண்ணீர் விட வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது. ஆகவே இந்த ஆண்டு கிருஷ்ணா தண்ணீர் கூடுதலாக கிடைக்கும் என்று ஆந்திர அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஏரிகளில் நீர் இருப்பு

பூண்டி ஏரியில் இன்றைய நிலவரப்படி 1926 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து செம்பரம்பாக்கத்துக்கு 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கத்தில் 1893 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது.
 
சோழவரம் ஏரியில் 555 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு 211 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. புழல் ஏரியில் இன்றைய நீர் இருப்பு 2701 மில்லியன் கனஅடி.
 
வீராணம் ஏரியில் 1039 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து சென்னைக்கு தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் குழாய் மூலம் செல்கிறது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe