தர்மபுரி, மார்ச்.12 (டிஎன்எஸ்) பென்னாகரம் இடைத்தேர்தலை தடுத்து நிறுத்த பாமக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து பாப்பாரப்பட்டியில் திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச் செயலாளரும் மாநில நிதியமைச்சருமான க அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். பொதுமக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதில் தமிழகம் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. நெசவுத் தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு இலவச மின்சாரம் தமிழகத்தில்தான் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர், அருந்ததி இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியவர் முதல்வர் கருணாநிதி என்ற அன்பழகன் கூறினார்.
பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக படுதோல்வியடையும் என்று தெரிந்துகொண்டதால், பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தலை நிறுத்த திட்டமிட்டு வருகிறார என அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு போலீஸார் கூடுதல் சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த ராமதாஸ், தனது காரை சோதனை செய்தபோது ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பிய அன்பழகன், வாகன சோதனையைக் கண்டித்து பாமகவினர் கலவரத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும் என்று அன்பழகன் பேசுகையில் குறிப்பிட்டார். (டிஎன்எஸ்)