Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

அதிமுக முன்னாள் அமைச்சர் மரணம் - ஜெயலலிதா இரங்கல்

தமிழ்நாடு | Fri, 12 Mar 2010 01:13 PM IST

விழுப்புரம், மார்ச்.12 (டிஎன்எஸ்) அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டமங்கலம் சுப்பிரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 63. அவரது மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறிதுகாலமாக உடல் நலம் குன்றியிருந்த சுப்பிரமணியன், விழுப்புரத்தில உள்ள அவரது சகோதரர் டாக்டர் ஆறுமுகம் என்பவரது வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை 1 மணியளவில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கண்டமங்கலம் தொகுதிக்குட்பட்ட சிறுவங்காடு ஊராட்சியில் அடங்கிய சின்னக்குப்பம் என்னும் ஊரைச் சேர்ந்த வி.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் 6 முறை விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தனி தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை கண்டமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

2001ஆம் ஆண்டில் வெற்றி பெற்றபோது சுமார் ஓராண்டு காலம் அவர் அமைச்சர் பதவியை வகித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக அவர் பணியாற்றினார்.

வி.சுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான சின்னக்குப்பத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறந்த சுப்பிரமணியத்துக்கு கமலம் என்ற மனைவியும், வேல்முருகன் என்ற மகனும் உள்ளனர்.

ஜெயலலிதா இரங்கல்:

அதிமுக பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில்:

முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளருமான கண்டமங்கலம் வீ.சுப்பிரமணியன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.

சுப்பிரமணியன் கண்டமங்கலம் தொகுதி வேட்பாளராக கழகத்தின் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe