Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

14 ஆண்டுகால கனவு : நிறைவேறியது மகளிர் மசோதா

தேசியம் | Wed, 10 Mar 2010 10:28 AM IST

புதுதில்லி, மார்ச்.10 (டிஎன்எஸ்) மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசேததா 2 நாள் பெரும் அமளிக்குப் பின் நேற்று (மார்ச்.9) ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 186 எம்.பி.,க்களும், எதிர்ப்பாக ஒரே ஒரு எம்.பி.,யும் ஓட்டளித்தனர். மூன்றில் இரண்டு பங்கிற்கு மேலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதா நிறைவேறியதன் மூலம், 14 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது.

இந்த மசோதாவுக்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக, சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சியான ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் ஓட்டெடுப்பை புறக்கணித்தது. ராஜ்யசபாவில் அந்தக் கட்சிக்கு 2 எம்பிக்கள் உள்ளனர். அதே பேதல பகுஜன் சமாஜ் கட்சியினரும் வெளிநடப்பு செய்து ஓட்டெடுப்பை புறக்கணித்தனர்.

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுந்தது. இதையடுத்து, பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தயார் செய்யப்பட்டு, ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவில், இதர பிற்பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் வலியுறுத்தின.அதனால், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழுவும், மசோதாவை தற்போதைய நிலையிலேயே நிறைவேற்ற ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

இதையடுத்து 100-வது சர்வதேச மகளிர்தினமான நேற்று முன்தினம், (மார்ச்.8) வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும், மேல்-சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அடுத்தடுத்து 6 முறை சபை ஒத்திவைக்கப்பட்டதால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஓட்டெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது.
 
காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த போதிலும், லாலு பிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ் கட்சிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள், `தலித்' மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
 
தற்போதைய நிலையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று அந்த கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், 2-வது நாளான நேற்றும் தில்லி மேல்-சபையில் அமளி நீடித்தது. நேற்று முன்தினம், சபை தலைவரின் மைக்கை உடைத்து கடுமையான அமளியில் ஈடுபட்ட லாலு, முலாயம்சிங், ராம்விலாஸ் பஸ்வான் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் 7 பேர், இந்த கூட்டத்தொடர் முழுவதும் `சஸ்பெண்டு' செய்யப்பட்டனர்.
 
இதனால் ஆவேசம் அடைந்த 7 எம்.பி.க்களும், சபையின் முதன்மை செயலாளர் மேஜையில் இருந்த பொருட்களை அள்ளி வீச முயன்றனர். உடனே சபை காவலர்கள், மனித சங்கிலி அமைத்து அவர்களை சூழ்ந்தபடி, வலுக்கட்டாயமாக அவர்களை சபையில் இருந்து வெளியேற்றினார்கள்.
 
மூன்று முறை ஒத்திவைப்பு, 7 எம்.பி.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கையை தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு சபை மீண்டும் கூடியது. இதற்கிடையே பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து, சபை கூடியதும் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா மீது குரல் ஓட்டெடுப்பு நடைபெறும் என்று, சபைத்தலைவர் ஹமீது அன்சாரி அறிவித்தார். பின்னர் பகுதிவாரியாக (டிவிஷன்) ஓட்டெடுப்பு நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
 
மசோதாவுக்கு ஆதரவு அளித்து வரும் பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பெண்கள் இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் தொடங்கியது. மேல்-சபை எதிர்க்கட்சி (பா.ஜனதா) தலைவர் அருண்ஜெட்லி விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
 
ஏறத்தாழ 3 மணி நேரம் நடைபெற்ற விவாதத்திற்கு பின், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 186 உறுப்பினர்களும், எதிராக ஒரே ஒரு உறுப்பினரும் ஓட்டளித்தனர்.
 
மசோதா, மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேறுவதற்கு, மொத்தம் உள்ள 233 உறுப்பினர்களில், 155 பேரின் ஆதரவு தேவை. 186 உறுப்பினர்கள் ஆதரவாக ஓட்டளித்ததை தொடர்ந்து பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்ட திருத்த மசோதா, அமோக ஆதரவுடன் மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டது.
 
வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் புதிய அரசியல் சகாப்தம் துவங்கியுள்ளது. ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள இந்த மசோதா, இனி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மக்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வரும்.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேறி விட்டால், மக்களவையில் மொத்தமுள்ள தேர்ந்தெடுக்கப்படும் 543 எம்.பி.,க்களில், 181 பேர் பெண்களாக இருப்பர். அதேபோல், 28 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளில் மொத்தமுள்ள 4,109 எம்.எல்.ஏ.,க்களில் 1,370 பேர் பெண்களாக இருப்பர். ஒருவகையில் ஆண்கள் பிரதிநிதித்துவம் குறையும். ஆனால், மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் பெண்கள் என்பதை பலரும் மறந்தனர். ஆப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள பிரதிநிதித்துவ சதவீதம் இங்கே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர்:

மசோதா மீது விவாதம் நடந்த போது குறுக்கிட்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "இந்தச் சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை. இது சிறுபான்மையினருக்கோ அல்லது தாழ்த்தப் பட்டோ ர் அல்லது மலைவாழ் பழங்குடியினருக்கோ எதிரானது அல்ல' என்றார்.

முன்னதாக, மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில், ஜெயந்தி நடராஜன், பிரபா தாகூர் (காங்கிரஸ்), நஜ்மா ஹெப்துல்லா, மாயாசிங் (பா.ஜனதா), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), பிருந்தாகரத் (மார்க்சிஸ்ட் கம்ஞ்னிஸ்டு), சதீஷ்சந்திர மிஸ்ரா (பகுஜன் சமாஜ்), ஷிவானந்த திவாரி (ஐக்கிய ஜனதா தளம்), தாரிக் அன்வர் (தேசியவாத காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்ஞ்னிஸ்டு), மைசூரா ரெட்டி (தெலுங்கு தேசம்), மனோகர் ஜோஷி (சிவசேனா), பி.எம்.மகபாத்ரா (பிஜவு ஜனதா தளம்), நரேஷ் குஜ்ரால் (சிரோன்மணி அகாலிதளம்), வீரேந்திரபிரசாத் பைஷ்யா (அசாம் கணபரிஷத்) மற்றும் பல உறுப்பினர்கள் பேசினார்கள்.
 
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா, ஏற்கனவே மூன்று முறை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் அதை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த மசோதா, தற்போது ராஜ்யசபாவில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டு இருப்பது, இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe