Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

புதிய சட்டசபையை திறந்து வைத்தார் பிரதமர்

சென்னை | Sat, 13 Mar 2010 07:49 PM IST

சென்னை, மார்ச்.13 (டிஎன்எஸ்) தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், 450 கோடி ரூபாய் செலவில், ஒன்பது லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா விழாவில் பங்கேற்றார்.

முன்னதாக இன்று மாலை 4.05 மணிக்கு, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் .ப.சிதம்பரம், அ.ராசா, ஜி.கே., வாசன், மு.க., அழகிரி, துணை முதல்வர் ஸ்டாலின், காங்., தலைவர் தங்கபாலு, ஆகியோர் பொன்னாடை கொடுத்தும், பூசசெண்டு வழங்கியும் வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், ராஜ்பவனுக்கு பிரதமர் செல்கிறார். சோனியா காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார்.

பின்னர் பிரதமரும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பிரதமர் மன்மோகன் சிங் மரக் கன்றுகளை நட்டார். பின்னர், முதல்வர் கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் பேட்டரி கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.

பிறகு மாலை 5 மணிக்கு விழா மேடைக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங்  ரிப்பனை கத்தரித்து கட்டடத்தை திறந்துவைத்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் வரவேற்றுப் பேசினார்.

முதல்வர் கருணாநிதி விழா தலைமையுரை நிகழ்த்திய பின்னர், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

பிரதமர் பேச்சு

விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: நாட்டில் கிராமப்புறம் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டம் செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவின் முன்மாதிரியாக திகழ்கிறது எனற அவர்,

மேலும் பேசுகையில், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் பலர் காரணமாக இருந்திருக்கின்றனர். ராஜகோபாலச்சாரி, காமராஜர், அண்ணாத்துரை, சி.சுப்பிரமணியம், எம்.ஜி., ராமச்சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அரும்பாடு பட்டவர்கள். இது போல் தமிழக முதல்வர் கருணாநிதி அரசியல் அனுபம், மற்றும் முதிர்ந்த அறிவு ஆகியன எனது அரசுக்கும் பக்கப்பலமாக இருக்கிறது.

அவர் சிறந்த நிர்வாகி அவரது தலைமையில் செயல்படும் தமிழகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுகிறது. இந்தியாவின் முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

முடிவில், தலைமைச் செயலர் திரிபாதி நன்றி கூறினார்.

இன்று நடந்த சட்டசபை கட்டட திறப்பு விழாவில் காய்ச்சல் காரணமாக  ஆளுநர் பங்கேற்கவில்லை.

ஆளுநர் நலம்பெற பிரதமர் பூச்செண்டு

காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் பர்னாலா விரைவில் உடல் நலம் பெற பிரதமரும், சோனியாவும் வாழ்த்து தெரிவித்தனர். அவர் உடல் நலம் பெற சட்டசபை கட்டட திறப்பு விழாவுக்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவி சோனியாவும், பூச்செண்டு கொடுத்தனுப்பினர். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe