Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ரஞ்சிதா விவகாரம்: ஒப்புக் கொண்டார் நித்தியானந்தா

சென்னை | Sat, 13 Mar 2010 05:39 PM IST

சென்னை, மார்ச்.13 (டிஎன்எஸ்) மூன்றாவது முறையாக விடியோ மூலம் விளக்கம் அளித்துள்ள நித்யானந்தா சர்ச்சைக்குரிய விடியோ தொடர்பான விவகாரம் எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமே என்று நித்யானந்தா கூறியுள்ளார். ரஞ்சிதாவுடன் தாம் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்

குறுகிய காலத்தில் உலகளவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையைப் பெற்றவரும், பிரம்மச்சரியமே சக்தியின் இருப்பிடம் என்றும், தனது பிரம்மச்சரியம் மூலம் உடலையே கருவியாக்கி நினைத்ததைச் சாதிக்கும் சித்தி பெற்றதாகவும் போதனை செய்துவந்தவர் இந்த 32 வயது சாமியார் நித்தியானந்தா.

தனக்குத் தானே பரமஹம்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கு 1500-க்கும் மேற்பட்ட ஆசிரம கிளைகள் உள்ளன.

எங்கு இருக்கிறார் நித்யானந்தா? என்பது தெரியாவிட்டாலும் தினமும் ஆசிரம நிர்வாகிகளோடும், தனது வக்கீல் ஸ்ரீதரோடும் பேசிக்கொண்டிருக்கிறார்.

எல்லோரையும் போல் ரஞ்சிதாவும் ஒரு பக்தை அவ்வளவுதான். என் மனமறிந்து சொல்கிறேன். யாரையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. உடலில் ஒளிந்து இருக்கும் சக்தியை ஒரு முகப்படுத்தி அறிவது தான் ஹீலிங் பயிற்சி. இதை கற்றவர்கள் யாரையும் தொடுவது தவறு இல்லை. இப்போது வெளியிட்டுள்ள படங்களை நான் பார்க்கவில்லை. பார்க்கும் எண்ணமும் இல்லை என்று கூறியுள்ளார்.
 
இப்போதைக்கு ஒன்றே மட்டும் சொல்வேன். வலிமையான சக்திகள் மூலமாக இந்த விவகாரம் பெரிது படுத்தப்படுகிறது. நான் என்ன சொன்னாலும் எடுபடாது.

3ஆவது முறையாக வீடீயோவில்

கடந்த 10ம் தேதி முதல் முறையாக திடீரென வீடியோவில் தோன்றி, தான் அலகாபாத் கும்பமேளாவில் இருப்பதாகவும், விரைவில் நேரில் வந்து எல்லாவற்றையும் விளக்குவேன் என்றும் தெரிவித்தார்.

போலீஸ் மற்றும் மீடியா அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனது தீவிர சீடரும், ப்ரீலான்ஸ் எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர் மூலம் தனது இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார். அந்த பேட்டியில், ரஞ்சிதா விவகாரம் பற்றி ராஜீவ் மல்ஹோத்ரா எதையும் கேட்கவில்லை. சாமியாருக்கு உகந்தமாதிரி கேள்விகள் எழுப்பி விடைகள் பெற்று வீடியோ சிடியாக அனுப்பி வைத்தார்.

புதிய வீடீயோ


இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மற்றொரு பாகம் வெளியானது. இது நித்யானந்தா வெளியிட்டுள்ள மூன்றாவது வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சிதா உடனான வீடியோ குறித்து நித்தியானந்தா குறிப்பிடுகையில்,

'பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?

இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார்.

அதாவது ரஞ்சிதாவுடன் தான் படுக்கை அறையில் இருப்பதை நித்தியானந்தா இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

சமூகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படாத எதையும் நான் செய்துவிடவில்லை. அந்த விடியோவில் சட்டத்திற்கு புறம்பாக எதுவுமில்லை. அதில், இரண்டு பேர் உடைகளுடன் தான் உள்ளனர். அதில், ஒருவர் மற்றவர் மீது எதையும் கட்டாயப்படுத்தவில்லை.

அந்த வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது இல்லை அதிலிருப்பது நாங்கள் இருவர்தான். ஆனால் எல்லாமே ஆடையுடன் இருந்த நிலையில்தான் நடந்துள்ளன என்கிறார்.

இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பது:

ஆன்மீக நடவடிக்கைகளில் ஆசிரமம் பரபரப்பாக இயங்கி வந்தது. எனவே, எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கவனிக்கத் தவறிவிட்டோ ம்.

பக்தர்கள் யாரையும் நான் சந்தேகப்படும் நிலையில் இல்லை. எனக்கென்று எதிரிகள் யாரும் இல்லை. அன்பை மட்டுமே போதிக்கும் எங்கள் மடத்தில் எதிரிகள் இருக்க வாய்ப்பு இல்லை.
 
ஒரு வேளை எதிரியே இருந்தாலும் அவர்களை மன்னிக்கும் மனோபாவத்தில் தான் நான் இருக்கிறேன். என்னை எதிரியாகவோ, நண்பராகவோ பார்க்காதவர்கள் கூட பரபரப்புக்காக இந்த விவகாரத்தை பெரிது படுத்திவிட்டார்கள். அந்த வருத்தம் எனக்கு இருக்கிறது.
 
நான் யாரையும் சந்தேகப்படவில்லை. இந்த வயதில், இந்த சமயத்தில் இத்தகைய பழியை நான் சுமக்க வேண்டும் என்பது என் கர்மவினை. இத்தகைய பழி வரும் என்பது முன் கூட்டியே தெரியும். கர்ம வினையை யாரால் தடுக்க முடியும்?
 
எப்படி இந்த பழிவந்ததோ அதேபோல் அடங்கி விடும். மடத்தின் பெருமை மறுபடியும் நிலைத்தோங்கும்.
 
செய்தித் தொடர்பிலும் எங்களுக்கு பெரிய தோல்வியே ஏற்பட்டது. எங்களுக்கு எதிராக இத்தகைய சதியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பக்தர்கள் அஞ்சுகின்றனர். குற்றச்சாட்டுகள் எழுந்தபோது அவர்கள் ஆசிரமத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நாங்கள் அமைதியான, சாதாரணமான மக்கள். நாங்கள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

ஊடகங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அதே நேரத்தில், எங்கள் தரப்பு விளக்கங்களுக்கும் இடம் அளித்திருக்க வேண்டும்.

என்னைவிட, ஊடகம் மக்களிடையே மிகப் பிரபலமாக இருப்பதால் என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பினர்.

குற்றச்சாட்டுகள் வெளியான நேரத்தில் உள்ளூர்வாசிகள் கூட எங்களுக்கு எதிராக திரும்பிவிட்டார்கள். ஒருதரப்பு செய்தி மட்டுமே ஊடகத்தில் வெளியானது. எனது பக்தர்களிடம் ஊடகம் எந்தவகையிலும் தொடர்புகொள்ளவில்லை.

இவ்வாறு நித்யானந்தா தனது மூன்றாவது விடியோவில் கூறியுள்ளார்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி


இதற்கிடையே 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள நித்தியானந்தா, 'ரஞ்சிதா என்னுடைய சிஷ்யை. இதற்கு முன்பும், இப்போதும், எப்போதும் அவர் என்னுடைய சிஷ்யையாகவே இருப்பார்.

நான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு பக்தை என்ற முறையில் ரஞ்சிதா எனக்கு பணிவிடை செய்தார். அதில் என்ன தவறு இருக்கிறது? எந்த ஒரு மனிதருக்கும் உதவி செய்ய ஒருவர் தேவை தானே, ஒரு பக்தை தாமாக முன்வந்து பணிவிடை செய்வதை நான் மறுக்க முடியாது. அதை ஏற்பதும் தவறல்ல. மற்றபடி, சட்டவிரோதமாக நானும் ரஞ்சிதாவும் எதையும் செய்யவில்லை.

இவையெல்லாம் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட ஒரு சதி தானே தவிர வேறில்லை.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகப் பெரிய 'மாஸ்டர்'களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியார், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர் போன்றவர்களும் இதுபோன்ற சோதனைகளை சந்தித்தார்கள்.

ஒவ்வொரு 'குரு'வும் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சோதனையான கட்டத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். எல்லா மாஸ்டர்களும் உடலாக இருந்த சமயத்தில் இன்றைய நித்தியானந்தா நிலையை கடந்து தான் சென்றார்கள்' என்று கூறியுள்ளார்.

ஓடி ஒளியவில்லை:

பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் தற்போது 20 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். ஆசிரமத்திற்கு பிதாடி உள்ளூர் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

சாமியார் நித்யானந்தா பற்றி வெளியான பரபரப்பு செய்திகளுக்கு அவர் வெளியே வந்து விளக்கம் அளிக்கும் வரை முற்றுப்புள்ளி இருக்காது என்றே எல்லோரும் கருதுகிறார்கள். சாமியாரோ, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. என் அன்றாட ஆன்மீக கடமைகளை செய்து கொண்டிருக்கிறேன். உண்மைகளை திரட்டி வருகிறேன். விரைவில் எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் என்று சி.டி.யில் தோன்றி விளக்கமளித்து வருகிறார். (டிடஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe