ஊட்டி, மார்ச்.9 (டிஎன்எஸ்) மசினகுடி அருகே சிறியூர் மலையில் ஏற்பட்ட வனத் தீ இரவு முழுவதும் எரிந்ததால் பல ஏக்கர் வனம் நாசமானது.
வனப்பகுதிகள் அதிகம் உள்ள சிங்காரா, சீகூர், முதுமலை புலிகள் காப்பகம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் தீ தடுப்பு நடவடிக்கையில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மசினகுடி அருகேவுள்ள சிறியூர் மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. இரவு நேரத்தில் காற்று அதிகமாக வீசியதால் வனத்தீ 'மளமள' வென பரவியது. சிறியூர் கோவில் விழாவுக்கு வந்திருந்த மக்கள் பார்த்து, வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், இரவு நேரத்தில் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தீயின் தாக்கம் அதிகரித்தது. அதிகாலை தீயின் தாக்கம் தானாக குறைந்தது. மலையின் மீது பெரும்பாலான பகுதிகள் புல்வெளிகளாக உள்ளதால், அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பாளர்கள் தீ வைத்திருக்கலாம் என சிலர் சந்தேகம் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
இதனால், அனைத்து இடங்களிலும் மரம் மற்றும் வனப்பகுதிகள், தாவரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. கோடை காலத்தில் மழை பெய்யாவிட்டால் வனப்பகுதிகளில் உள்ள தாவரங்கள் பசுமை மாறி காய்ந்து எளிதில் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. (டிஎன்எஸ்)